பெரியாழ்வார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் குரோதன ஆண்டு ஆனித் திங்கள், சுவாதி நட்சத்திரத்தில் முகுந்தபட்டர் - பதுமவல்லி தம்பதியருக்கு திருமாலின் வாகனமான கருடனின் அம்சமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். விஷ்ணுசித்தன் என்பது இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்.
இவர் இளமையில் கல்வி, கேள்விகளில் ஞானம் பெற்று தமது வாழ்க்கையை திருமாலுக்கே அர்ப்பணித்தார். ஓர் அழகிய பூந்தோட்டத்தை உருவாக்கி அதில் பூத்த மலர்களை மாலைகளாகக் கட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார்.
அந்நாளில் மதுரையை ஆண்ட வல்லபதேவன் என்ற மன்னன் மாறுவேடத்தில் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கிய அந்தணரை எழுப்பி அவரைப் பற்றி வினவியபோது, அவர் தான் வடநாடு சென்று கங்கையில் நீராடி வருவதையும், இரவில் ஓய்வெடுக்கப் படுத்துறங்கியதாகவும் தெரிவித்தார். அரசன் தன்னைப் பற்றித் தெரிவிக்காமல் தனக்கு நீதி, நெறிகளை அருளுமாறு வேண்ட, அவரும் மறுமையில் நல்வாழ்வு பெற இம்மையிலேயே முயலவேண்டும் என்று கூறினார்.
அரசன் அவரது கருத்துக்களில் ஆழ்ந்து, உயர்ந்த பரம்பொருள் யார் என்று தமக்கு சந்தேகமில்லாமல் தெரிவிப்பவர்களுக்கு பொற்கிழி பரிசளிப்பதாக நாடெங்கும் அறிவித்தான். திருமால், விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி இதை அறிவித்து. பொற்கிழியைப் பெற்று வருமாறு அருளினார். இறைவனின் ஆணையை ஏற்று விஷ்ணு சித்தர், மதுரை சென்று மன்னனுக்கு சந்தேகமில்லாமல் விளக்கினார். மன்னன் மகிழ்ந்து பொற்கிழியையும் "பட்டர்பிரான்" என்ற பட்டத்தையும் அளித்து யானை மேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான்.
பெரியாழ்வார் நகர்வலம் வரும்போது திருமால் கருட வாகனத்தில் காட்சி அளித்தார். அதைக் கண்டு மகிழ்ந்த பெரியாழ்வார் நாராயணனை வாழ்த்தி "திருப்பல்லாண்டு" பாடினார். "திருப்பல்லாண்டு" என்ற 12 பாசுரங்களும், "பெரியாழ்வார் திருமொழி" என்ற 461 பாசுரங்களுமாக 473 பாசுரங்களை பெரியாழ்வார் அருளினார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலில் பெரியாழ்வார் திருமொழி இருப்பது இவரின் பெருமையை உணர்த்தும்.
|